ஸ்ரீமதி மரண வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்


ஸ்ரீமதி மரண வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஆசிரியைகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது

விழுப்புரம்

விழுப்புரம்

மாணவி மர்ம சாவு

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளியின் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் கடந்த 2022 ஜூலை 17-ந் தேதியன்று ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரிய கலவரமாக வெடித்து வன்முறையில் முடிந்தது. பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.

இது குறித்து மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

2 ஆசிரியைகளின் பெயர்கள் நீக்கம்

பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு பிறகு 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த இவ்வழக்கை தற்கொலைக்கு காரணமாக இருத்தல்(சட்டப்பிரிவு 305) மற்றும் இளஞ்சிறார் நீதி குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்(75), காப்பகங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம்(சட்டப்பிரிவுகள் 5, 6) ஆகிய பிரிவுகளில் மாற்றம் செய்திருந்தனர்.

மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகளான கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரின் பெயர்களையும் இவ்வழக்கில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கம் செய்துள்ளனர்.

இதையடுத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாணவியின் தாய் செல்விக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், இவ்வழக்கில் இருந்து கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதால் இதில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 5-ந் தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆட்சேபனையை தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு முறையீடு

இதற்காக குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, நேற்று விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்தார். அதற்கு கோர்ட்டு மூலமாக மனுதாக்கல் செய்து பெற்றுக்கொள்ளுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஆசிரியைகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி நிருபர்களிடம் கூறுகையில், மாணவி ஸ்ரீமதி வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆசிரியைகள் 2 பேரை ஏன் போலீசார், இவ்வழக்கில் இருந்து நீக்க வேண்டும். அவர்கள் விசாரணைக்கு வந்தால் எல்லா உண்மையும் வெளிவந்து விடும் எனக்கருதி இப்போதே 2 பேரின் பெயரையும் நீக்கிவிட்டனர். குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செயல்படுகின்றனர்.

நாங்கள் இதுசம்பந்தமாக மேல்முறையீடு செய்வோம். இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் தனி நீதிபதி கொண்டு இவ்வழக்கை விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.


Next Story