பெற்றோர் புகாரால் 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம்
திருவாடானை அருகே பெற்றோர் புகாரால் 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக பகவதியும், இடைநிலை ஆசிரியையாக கண்ணகியும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் பள்ளியின் செயல்பாடுகள் குறைந்து விட்டது எனவும் தலைமை ஆசிரியை பள்ளிக்கு சரிவர வருவதில்லை என்றும் இதனால் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர், கல்வி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் செய்து வந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் வட்டார கல்வி அலுவலர் புல்லாணி மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரால் ்நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினர் கடம்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி குழந்தைகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த குழுவினர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் கடம்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பகவதி மற்றும் இடைநிலை ஆசிரியை கண்ணகி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் உத்தரவிட்டார். வேறு 2 ஆசிரியர்கள் இப்பள்ளிக்கு மாற்றுப்பணியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.