புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை 2 குழுக்கள் ஆய்வு


புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை 2 குழுக்கள் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2023 1:00 AM IST (Updated: 20 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நடக்கும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை சட்டசபை உறுதிமொழி குழு அறிவுறுத்தலின்பேரில் 2 குழுவினர் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நடக்கும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை சட்டசபை உறுதிமொழி குழு அறிவுறுத்தலின்பேரில் 2 குழுவினர் ஆய்வு செய்தனர்.

புதிய பஸ் நிலையம்

மயிலாடுதுறை அருகே மணக்குடி என்ற இடத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து கடந்த வாரம் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான சட்டசபை உறுதிமொழி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது பஸ் நிலையம் கட்டுவதற்காக கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்கான இரும்பு கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. இதை பார்வையிட்ட வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் குழுவினர் இந்த கம்பிகள் வளையும் தன்மையுடன் உறுதியற்ற நிலைமையில் காணப்பட்டதால், கட்டுமான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பொருட்கள் வைத்து முறையாக கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

2 குழுவினர் ஆய்வு

அதன்பேரில் மயிலாடுதுறை புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் குறித்து பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிகள் பிரிவு செயற்பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் ஒரு குழுவும், நகராட்சி சார்பில் தஞ்சை மண்டல நிர்வாக இயக்குனர் சரஸ்வதி தலைமையில் மற்றொரு குழுவும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிமெண்டு, ஜல்லி, எம்-சாண்ட், இரும்பு முறுக்கு கம்பிகளின் தரம் ஆகியவை குறித்து சோதனை நடந்தது. இந்த ஆய்வை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டார். இந்த குழுக்கள் ஓரிரு நாட்களில் தங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.


Next Story