திருமண வரவேற்பு விழாவில் இரு தரப்பினர் திடீர் மோதல் 2 வாலிபர்கள் காயம்


திருமண வரவேற்பு விழாவில் இரு தரப்பினர் திடீர் மோதல் 2 வாலிபர்கள் காயம்
x

விக்கிரவாண்டியில் திருமண வரவேற்பு விழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

விழுப்புரம்

விக்கிரவாண்டி

திருமண வரவேற்பு விழா

விக்கிரவாண்டி அருகே உள்ள ஆர்.சி.மேலக்கொந்தையை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவருக்கும், கப்பியாம்புலியூரை சேர்ந்த பரணிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் இவர்களின் திருமண வரவேற்பு விழா நேற்று முன்தினம் மாலை விக்கிரவாண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது அங்கு நடந்த இசை நடன நிகழ்ச்சியில் பெண் வீட்டு தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதிக சத்தத்துடன் நடனமாடிக்கொண்டிருந்தார். இதை மாப்பிள்ளைவீட்டார் தட்டிக் கேட்ட போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது.

2 பேர் காயம்

இதில் இரு வீட்டை சேர்ந்தவர்களும் அங்கிருந்த சேர் மற்றும் இரும்பு தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது மண்டபத்தில் இருந்த பெண்கள் மற்றும் சில ஆண்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் திருமண மண்டபமே போர்க்களமாக காட்சி அளித்தது.

இந்த தாக்குதலில் ஆர்.சி. மேலக்கொந்தையை சேர்ந்த இளவரசனின் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து தாக்கியதில் கப்பியாம்புலியூரை சேர்ந்த தினேஷ்(வயது 23), பிரதீஸ் (24) ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார். திருமண வரவேற்பு விழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் விக்கிரவாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.


Next Story