2 டிரைவர்களின் 'லைெசன்ஸ்' தற்காலிக ரத்து
அதிவேகமாக பஸ்களை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 2 டிரைவர்களின் லைெசன்சை தற்காலிகமாக ரத்து செய்து, வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
கிணத்துக்கடவு
அதிவேகமாக பஸ்களை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 2 டிரைவர்களின் லைெசன்சை தற்காலிகமாக ரத்து செய்து, வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
விபத்தில் பெண் பலி
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்த சிவலிங்கம் என்பவருடைய மனைவி அங்காத்தாள்(வயது 55). அவர்களது மகன் முனியப்பன்(35). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி அங்காத்தாள் மற்றும் முனியப்பன் ஆகியோர் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையை சென்றாம்பாளையம் பிரிவில் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த 2 தனியார் பஸ்கள் அடுத்தடுத்து 2 பேர் மீதும் மோதியது. இதில் அங்காத்தாள் உயிரிழந்தார். முனியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்காலிக ரத்து
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விபத்தை ஏற்படுத்திய 2 பஸ்களும் போட்டிப்போட்டு கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அந்த பஸ்களின் டிரைவர்களான பகவதிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்(30), திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை(லைசென்ஸ்) ரத்து செய்ய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முருகானந்தத்துக்கு பரிந்துரை செய்தார். அவர், லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஒரு பஸ்சில் வேக கட்டுப்பாட்டு கருவி உடைக்கப்பட்டு இருந்ததால், அதன் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. அதிவேகமாக இயக்கப்படும் பஸ்கள் மற்றும் டிரைவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.