2 ஜவுளிக்கடைகளில் திருட்டு
2 ஜவுளிக்கடைகளில் திருட்டு
தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஊழியர்கள் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் ஊழியர்கள் கடைக்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடையின் கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கல்லாப்பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடை உரிமையாளர் தஞ்சை கிழக்கு போலீசில் மர்ம நபர்கள் கடையின் முன்பக்கமாக மாடி வழியாக நுழைந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.80 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர் என புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைளை பதிவு செய்தனர். மேலும் மர்ம நபர்கள் அருகில் உள்ள மற்றொரு ஜவுளிக்கடையிலும் பின்பக்க கதவை உடைத்து அங்கிருந்த ரூ.9 ஆயிரத்தையும் திருடிச்சென்றுள்ளனர். இது குறித்தும் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கடைகளிலும் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.