2 அம்மன் கோவில்களில் வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
திருச்சியில் 2 அம்மன் கோவில்களில் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் 2 அம்மன் கோவில்களில் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குழுமாயி அம்மன் கோவில்
திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் தொட்டி பாலம் அருகே பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குட்டிக்குடித்தல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சம்பவத்தன்று பூசாரி பன்னீர்செல்வம் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.நேற்று முன்தினம் காலையில் பன்னீர்செல்வம் கோவிலை திறக்க வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 30 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
கண்காணிப்பு கேமரா பதிவு
இதுகுறித்து பன்னீர் செல்வம் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விரல் ரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூஜை பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பகவதி அம்மன் கோவில்
இதேபோல் திருச்சி கீழப்புதூரில் பாலக்காட்டு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி, உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து காஜாபேட்டையை சேர்ந்த மதுரை வீரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.