2 ஆயிரத்து 965 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்


2 ஆயிரத்து 965 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நேற்று 2 ஆயிரத்து 965 பயனாளிகளுக்கு ரூ.22.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று 2 ஆயிரத்து 965 பயனாளிகளுக்கு ரூ.22.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் வழங்கினார்.

நலத்திட்ட உதவி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் வழங்கினார்

விழாவில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 2 ஆயிரத்து 965 பயனாளிகளுக்கு ரூ.22.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் வழங்கினார். நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தினை வழங்கினார். மேலும், கூட்டுறவு சங்கத்தில் உள்ள விவசாய கடன், 5 பவுன் நகைக்கடன் ஆகியவற்றையும் தள்ளுபடி செய்தார். மேலும் அவர் மக்களுக்காக தொடர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.ஆயிரம் தொடர்ந்து வழங்கப்படும். இதேபோல் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள் ஆகியோருக்கான உதவித்தொகையும் தொடர்ந்து வழங்கப்படும்.

ஆதரவு தர வேண்டும்

மேலும் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.ஆயிரம் வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டத்தை தந்துள்ளார். இல்லம்தேடி கல்வி, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 ஆண்டு சாதனை ஆட்சி முடிந்து 3-வது ஆண்டினை தொடங்குகிறார். அவர் நீண்ட ஆயுளோடு எந்த சக்தியாலும் அவரை தொட முடியாத நிலையை உருவாக்குகின்ற வகையில் மக்கள் சக்தியான நீங்கள் என்றென்றும் அவருக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.68 லட்சம் மதிப்பில் 468 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ரூ.3.73 லட்சம் மதிப்பில் 373 பேருக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ரூ.8.58 லட்சம் மதிப்பில் 572 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 965 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 38 ஆயிரத்து 254 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதிஅம்பாசங்கர், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story