சேலத்தில் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு கோவில்களில் சிறப்பு பூஜை


சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

சேலம்

சேலம்,

ராஜகணபதி கோவில்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது.

அதைத்தொடர்ந்து ராஜகணபதிக்கு 108 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், திரவியம், மஞ்சள், சந்தனம், விபூதி உள்பட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ராஜகணபதிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ராஜகணபதியை தரிசனம் செய்து வழிபட்டனர். இதையொட்டி சேலம் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேவராஜ கணபதி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வருகிற 11-ந் தேதி வரை தினமும் ராஜகணபதிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. இதேபோல் சேலம் ராஜாராம் நகர் தேவராஜ கணபதி, வரப்பிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டை அப்பாசாமி தெருவில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டனர். அப்புச்செட்டி தெருவில் உள்ள அரசமரம் விநாயகர் ஐந்துதலை நாகராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாய்பேட்டை வாசவி மகாலில் விநாயகர் சுவர்ண கணபதி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

முத்தங்கி அலங்காரம்

அரிசிப்பாளையம் தெப்பக்குளம் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சேலம் சங்கர் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் பெரமனூரில் உள்ள சிதம்பர விநாயகர் கோவிலில் சாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். இதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

2 ஆயிரம் இடங்களில் பிரதிஷ்டை

சேலம் மாநகரில் இந்து முன்னணி சார்பில் எல்லைப்பிடாரியம்மன் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, குகை, செவ்வாய்பேட்டை, ரத்தினசாமிபுரம், சங்கர் நகர், பெரமனூர், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட 800 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

சேலம் புறநகர் பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. அங்கு 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலைகள் கரைப்பு

சேலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மூக்கனேரியில் கரைக்கப்படுகிறது.

எடப்பாடி பகுதியில் 88 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சிலைகளை கரைக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் அனுமதித்த இடமான காவேரி கிழக்கு கரை கால்வாயில் பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி பகுதியில் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.

இதே போல தேவூர் அருகே கிழக்கு கரை கால்வாயில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் டெம்போவில் கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டது.

ஓமலூர் பகுதியில் பச்சனம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, செம்மாண்டப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட 99 இடங்களிலும், காடையாம்பட்டி வட்டாரத்தில் தீவட்டிப்பட்டி, காடையாம்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 122 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.மேச்சேரி பகுதியில் 47 இடங்களிலும், நங்கவள்ளி, வனவாசி பகுதிகளில் 36 இடங்களிலும், ஜலகண்டாபுரம் பகுதியில் 65 இடங்களிலும், தலைவாசல் பகுதியில் 21 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ந் தேதி நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story