நாமக்கல்லில் 10 நாட்களில்தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்தது
நாமக்கல்லில் கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தங்கம் விலை சரிவு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,625-க்கும், ஒருபவுன் ரூ.45 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விற்பனையும், விலையும் சரிவடைய தொடங்கியது.
அதன்படி கடந்த மாதம் 21-ந் தேதி ஒரு கிராம் ரூ.5,607-க்கும், 23-ந் தேதி ரூ.5,600-க்கும், 26-ந் தேதி ரூ.5,488-க்கும், 27-ந் தேதி ரூ.5,488-க்கும், 28-ந் தேதி ரூ.5,413-க்கும், 29-ந் தேதி ரூ.5,400-க்கும் என படிப்படியாக விலை சரிவடைந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,375-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
பெண்கள் மகிழ்ச்சி
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.2 ஆயிரம் சரிவடைந்து இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகள் எதுவும் நடைபெறுவது இல்லை.
எனவே தங்கம் விற்பனை சரிவடைந்து உள்ளது. இதுவே விலை சரிவுக்கு காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் ஐப்பசி மாதம் தொடங்கி விட்டால் தங்கம் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.