2 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது
கேரளாவில் இருந்து மதுரைக்கு கடத்த முயன்ற 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை
கேரளாவில் இருந்து மதுரைக்கு கடத்த முயன்ற 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா கடத்தல்
கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு குட்கா கடத்தப்படுவதாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார், பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் தமிழக-கேரள எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். பின்னர் அந்த வாகனத்தில் ஏறி சோதனையிட்டபோது, உர மூட்டை போன்று பேக்கிங் செய்து, 2 டன் குட்காவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த சரக்கு வாகனத்துக்கு பாதுகாப்பாக ஒரு காரும் வந்தது. அந்த காரில் 3 பேர் இருந்தனர். பின்னர் அதையும் போலீசார் மடக்கினர்.
ரூ.10 லட்சம் மதிப்பு
இதையடுத்து கார் மற்றும் சரக்கு வாகனத்தில் இருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அஜய் சதீஷ்(வயது 22), சத்யா(21), செந்தில்(43), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அருள்குமார்(36), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்(21) ஆகியோர் என்பதும், கேரளாவில் இருந்து மதுரைக்கு குட்காவை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. அந்த குட்காவின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து குட்கா, கார், சரக்கு வாகனம், ரூ.16 ஆயிரத்து 200 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 5 பேரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.