திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்ட 2 பேர் சிக்கினர்
பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூரில் நடந்த திருட்டு வழக்கில் தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த மதன் (என்ற) முருகன் (வயது 36), நாமக்கல் மாவட்டம் கோனூரை சேர்ந்த மனோஜ்குமார் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பட்டிவீரன்பட்டியில் டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் வழிப்பறி மற்றும் அய்யம்பாளையத்தில் பலசரக்கு கடை மேற்கூரையை உடைத்து ரூ.90 ஆயிரம் திருடியதாக கூறினர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவர்கள் இருவரையும் பட்டிவீரன்பட்டி போலீஸ்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அதில் திருடிய பணத்தில் கோவா, மும்பை ஆகிய இடங்களுக்கு சென்று ஆடம்பர செலவு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன், மனோஜ்குமார் ஆகிய 2 ேபரையும் கைது செய்தனர்.