முதியவரை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது
வாடகைக்கு வீடு கேட்டு வந்து முதியவரை தாக்கி நகையை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
வாடகைக்கு வீடு கேட்டு வந்து முதியவரை தாக்கி நகையை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
பொள்ளாச்சி பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு 2 பெண்கள் வந்தனர். பின்னர் அவரிடம், வீடு வாடகைக்கு இருக்கிறதா? என்று கேட்டனர். அதற்கு தேவராஜ் பதில் கூறி கொண்டு இருக்கும்போதே திடீரென அவரது முகத்தை துணியால் மூடி தாக்க தொடங்கினர்.
இதில் நிலைகுலைந்து போன தேவராஜிடம் இருந்து தங்க மோதிரம், செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் 2 பெண்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
2 பெண்கள் கைது
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் 4 பவுன் மோதிரம், 5 பவுன் செயின், செல்போனை அந்த பெண்கள் பறித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பல்லடம் ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பெண்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அப்போது முன்னுக்கு பின் முரணாக தகவலை கூறியதால், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்த பவித்ரா தேவி (26), விஜயலட்சுமி (24) என்பது தெரியவந்தது. மேலும் தேவராஜை தாக்கி நகையை பறித்தது அவர்கள்தான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகையும் மீட்கப்பட்டது.