ஓடும் பஸ்சில் பயணியிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது
குளித்தலை அருகே ஓடும் பஸ்சில் பயணியிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
3 பவுன் சங்கிலி திருட்டு
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்தவர் அகிலாம்பாள் (வயது 52). இவர் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அய்யர்மலையில் இருந்து குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு மீண்டும் அய்யர்மலை செல்வதற்காக குளித்தலை சுங்ககேட் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்துள்ளார்.
குளித்தலையில் இருந்து மணப்பாறை நோக்கிச் சென்ற தனியார் பஸ்சில் ஏறி அய்யர்மலையில் இறங்கி உள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லையாம். இது குறித்து அவர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2 பெண்கள் கைது
இந்தநிலையில் குளித்தலை போலீசார் குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அந்த பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த 2 பெண்கள் போலீசார் வருவதைப் பார்த்து எழுந்து வேகமாக நடந்து சென்றுள்ளார்கள். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, போது அந்தப் பெண்கள் திருவண்ணாமலை மாவட்ட பகுதியைச் சேர்ந்த காவேரி (29), சோலையம்மாள் (30) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த 2 பெண்கள்தான் அகிலாம்பாள் பஸ்சில் சென்றபோது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து அகிலாம்பாளிடம் செயின் திருடிய வழக்கில் காவேரி மற்றும் சோலையம்மாள் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. காவேரி சோலையம்மாளின் அண்ணன் மனைவி என்பதும், பல ஊர்களில் நடந்த திருட்டு சம்பவத்தில் இவர்கள் 2 பேரும் தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.