நகை அடகுக்கடையில் ரூ.90 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பெண்கள் கைது


நகை அடகுக்கடையில் ரூ.90 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பெண்கள் கைது
x

நகை அடகுக்கடையில் ரூ.90 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

உடையார்பாளையம்:

பணம் திருட்டு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடைவீதியில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அய்யானார் கோவில் தெருவை சேர்ந்த முகேஷ்குமார் மகன் வினித் குமார் (வயது 22) என்பவர் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மதியம் அந்த கடைக்கு வந்த 2 பெண்கள், ஒரு கிராமிற்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது வினித்குமாருக்கு போன் வந்ததால், அவர் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 2 பெண்களும் கடையில் இருந்த ரூ.90 ஆயிரத்தை திருடிச்சென்றனர். பின்னர் வினித்குமார் கடைக்குள் வந்து டிராவை திறந்து பார்த்தபோது ரூ.90 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

2 பெண்கள் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த வினித்குமார், இது குறித்து உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த பெண்களை தேடினார். இதில் உடையார்பாளையம் கடைவீதியில் இருந்த அந்த பெண்களை மடக்கி பிடித்து, அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதில் அவர்கள், சேலம் மாவட்டம், மேட்டுத்தெருவை சேர்ந்த கண்ணனின் மனைவி மீனாட்சி(32), சேலம் மாவட்டம், கொட்டாரம் பட்டி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் மனைவி மாரியம்மாள்(32) என்பதும், அடகு கடையில் இருந்து பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story