2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயற்சி
சாலையை சீரமைக்க நிதி ஒதுக்காததை கண்டித்து 2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயன்றதால், பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை:
சாலையை சீரமைக்க நிதி ஒதுக்காததை கண்டித்து 2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயன்றதால், பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பத்மநாபபுரம் நகராட்சி கூட்டம்
பத்மநாபபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று தலைவர் அருள் சோபன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன், கமிஷனர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மருந்துக்கோட்டை உரக்கிடங்கு பகுதியில் ரூ.1 கோடியே 48 லட்சத்தில் பணிகள் முடியும் தருவாயில் உள்ள எரிவாயு தகன மேடையை தனியார் மூலம் பராமரிப்பது குறித்தும், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.4 கோடியே 47 லட்சத்தில் நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலைகளில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பகுதியை சீரமைப்பது போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.
பெண் கவுன்சிலர்கள் ஆவேசம்
மேற்கண்ட தீர்மானங்கள் குறித்து விவாதம் தொடங்கியது.
அப்போது சுயேச்சை கவுன்சிலர்கள் ஷபீனா, மும்தாஜ் ஆகியோர் தங்கள் இருக்கையைவிட்டு எழுந்து, எங்களது வார்டுகளுக்கு சாலையை சீரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. வேண்டுமென்றே எங்களை புறக்கணித்திருக்கிறார்கள் என்று கூறியபடி தலைவர் இருக்கைக்கு முன்னால் வந்து ஆவேசமாக பேசினார்கள்.
அப்போது கவுன்சிலர் மும்தாஜ் விவாதிக்கும் பொருள் நகலை கிழித்து போட்டார்.
அதனைத்தொடர்ந்து இந்த குளறுபடிக்கு யார் காரணம்? என்று தலைவர் அருள்சோபன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு என்ஜினீயர் ஜீவா, நாம் நகராட்சியில் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி வேண்டி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தோம். அங்குதான் சில பணிகளை குறைத்து விட்டு தற்போது ரூ.4 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரத்திற்கான பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்று கூறினார்.
தீக்குளிக்க முயற்சி
என்ஜினீயர் பதிலில் திருப்தியடையாத கவுன்சிலர்கள் ஷபீனா மற்றும் மும்தாஜ் ஆகியோர் தாங்கள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து மண்எண்ணெயை திடீரென தலையில் ஊற்றி விட்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதை பார்த்த துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன், கவுன்சிலர்கள் நாகராஜன், சுலைகா பேகம் ஆகியோர் அவர்களிடமிருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தை ரத்து செய்யும்படி துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
போலீசார் வந்தனர்
கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து அறிந்ததும் தக்கலை போலீசார் கூட்ட அரங்கில் வந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்,
அதனைத்தொடர்ந்து தலைவர் அருள் சோபன் கூறும்போது, கூட்டத்தை ஒத்திவைத்தால் பணிகளை உடனே தொடங்க இயலாது. இதனால் நகராட்சி பகுதி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே உங்கள் வார்டு பகுதியில் பொது நிதி மூலம் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதை ஏற்க மறுத்த பெண் கவுன்சிலர்கள், தங்களுக்கும் மற்ற பகுதிகளை போல பணி உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் கூட்டம் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேறின
இதற்கு தீர்வு காணும்படி அதிகாரிகளிடம் தலைவர் அருள் சோபன் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து மற்ற வார்டு பகுதிகளில் உள்ள பணிகளை குறைத்து, 2 வார்டு பகுதிகளுக்கும் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதிக்கு அனுப்பலாம் என்று என்ஜினீயர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து எந்தெந்த பணிகள் தேவை என்பது குறித்து போராட்டம் நடத்திய கவுன்சிலர்களிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொண்டார். இதனால் 2 மணிநேரமாக தொடர்ந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து விவாதங்கள் இல்லாமல் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மேலாளர் ஜெயன் பெல்லார்மின், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், கவுன்சிலர்கள் ஜெயசுதா, கிருஷ்ணபிரசாத், நாதிரா பானு, செந்தில்குமார், வினோத்குமார், ஷேக்முகமது, கீதா, ஜெமீலா ஆரோக்கிய ராணி, அபிலா, சுகந்தி, சிவா, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்,
பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் 2 ெ்பண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.