கள்ளக்குறிச்சியில்டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 பெண்கள் சாவு


கள்ளக்குறிச்சியில்டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 பெண்கள் சாவு
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளாங்தாங்கல் ரோட்டை சேர்ந்தவர் தன்ராஜ் மனைவி கீர்த்தனா (வயது 28). இதேபோன்று, எறஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் மனைவி விஜயபாரதி (28).

இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் பிரிவில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தனர். இதில் கீர்த்தனா மேலாளராக இருந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

நேற்று மாலை வழக்கம்போல் பணி முடிந்தவுடன் தன்ராஜியுடன் மோட்டார் சைக்கிளில் கீர்த்தனா சென்றார். அப்போது, விஜயபாரதியும் அவர்களுடன் சென்றுள்ளார்.

இவர்கள் கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோடு மாமானந்தல் அருகே வந்த டிராக்டரை தன்ராஜ் முந்தி செல்ல முயன்றார். அந்த சமயத்தில் எதிரே, கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேர் சாவு

இதில் கீர்த்தனா, விஜயபாரதி ஆகிய இருவரும் இடது பக்க சாலையில் விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த டிராக்டர் சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் கீர்த்தனா, விஜயபாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடி, துடித்து உயிரிழந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பஸ் வசதி இல்லை

இதனிடையே சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இங்கு சிகச்சைக்காக வருபவர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், பணியாளர்கள் என்று அனைவரும் ரோடு மாமானந்தல் கைகாட்டி வரைக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பஸ் ஏறி செல்கிறார்கள். பலர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி, பலியாகும் சம்பவம் அடிக்கடி நேர்ந்து வருகிறது. எனவே இதை தடுக்க மருத்துவமனைக்கு பஸ் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.


Next Story