ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி
ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பெண்கள் பலியானார்கள்.
கொரோனா தொற்று
நாடுமுழுவதும் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி ஒரே நாளில் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதுவே நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 303 ஆக உயர்ந்தது. தினந்தோறும் கொரோனா தொற்று உயர்ந்து வருவதால் தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நோயாளிகள் உள்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நடைமுறை தற்போது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2 பெண்கள் பலி
இந்தநிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ரத்த அழுத்த நோய், நாள்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் நேற்று காலை 9 மணிக்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபோன்று திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர், கடந்த மாதம் 23-ந்தேதி பக்க வாத நோய் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
அதிர்ச்சி
இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் நேற்று காலை 9.45 மணிக்கு இவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த 2 பேரின் உடல்களும் அவர்களின் குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில், கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து கொரோனாவுக்கு 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.