நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் ஒரு நாற்காலிக்கு 2 பெண் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டி வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு
நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் ஒரு நாற்காலிக்கு 2 பெண் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே போட்டி ஏற்பட்டது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
நாற்காலிக்கு போட்டி
நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் கூட்ட அரங்கில் உள்ள முதல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் என்பவர் இலக்கியாவிடம் நான் அந்த இடத்தில் கடந்த 6 மாதமாக அமர்ந்து வருகிறேன். ஆகையால் நீங்கள் ஏற்கனவே அமர்ந்த நாற்காலியில் அமர வேண்டும் என்றார்.
வாக்குவாதம்
அதற்கு இலக்கியா சாமிநாதன், நான் 2-வது வார்டு கவுன்சிலர் என்பதால் வரிசைப்படி இங்கு அமர்ந்து உள்ளேன். நான் எழுந்து செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக கூறியதால், அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதைபார்த்த மற்ற கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், ஜெயபிரபா மணிவண்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்ட அரங்கிற்கு அழைத்து வந்து, அவர் ஏற்கனவே அமர்ந்திருந்த நாற்காலியில் அமர வைத்தனர். மேலும் கவுன்சிலர் இலக்கியா சாமிநாதனும் வேறு நாற்காலியில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுயேச்சை கவுன்சிலர் தர்ணா
இதனை தொடர்ந்து 9-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சத்யா, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், எனது வார்டில் ஒரு வீட்டிற்கு நகராட்சி ஊழியர்கள் குடிநீர் இணைப்பு கொடுத்ததாகவும், பின்னர் திடீரென வீட்டு வரி செலுத்தவில்லை என கூறி குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டதாகவும் கூறினார்.
அதற்கு நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.
சிறிய வீட்டிற்கு அதிக வரி
இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சிறிய வீடுகளுக்கு அதிகவரியும், பெரிய வீடுகளுக்கு குறைந்த வரியும் விதிக்கப்படுவதாகவும், சாலை விரிவாக்கப்பணிக்காக 30 ஆண்டுகளாக இயங்கி வந்த நெல்லிக்குப்பம் பஸ் நிறுத்தத்தை அகற்றியதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருவதாகவும் கவுன்சிலர்கள் கூறினர்.
அதற்கு பதில் அளித்து நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பேசுகையில், நெல்லிக்குப்பம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்றுவதற்கு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது. மேலும் கவுன்சிலர்கள் அளித்த புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. ஆகையால் அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இக்பால், முத்தமிழன் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.