போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் விவசாய கிணற்றில் குதித்ததால் பரபரப்பு


போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் விவசாய கிணற்றில் குதித்ததால் பரபரப்பு
x

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து 18 நாட்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் உள்பட நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

18-வது நாள் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஊர்வலமாக சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், மனு அளிக்க சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அந்த சமயத்தில் மாற்று இடம் பார்க்க சொல்லி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது.

2 பெண்கள் குதித்தனர்

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று போலீசாரின் பாதுகாப்புடன் அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் குப்பை கிடங்கு அமைப்பதற்கான இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நிர்மலா, குமாரி ஆகிய 2 பெண்கள் திடீரென அங்கிருந்த 80 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த வாலிபர்கள் அவர்களை மீட்க கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கினர்.

ஆம்புலன்சு

பின்னர் 2 கட்டில்களை கட்டி மேலிருந்தவர்கள் கிணற்றுக்குள் இறக்கினர். கீழே நின்றவர்கள் மீட்கப்பட்ட 2 பெண்களை ஒவ்வொருவராக கட்டிலில் வைத்தனர். அதன்பின் மேலே இருந்தவர்கள் போலீசாருடன் 4 கயிறு மூலம் கட்டிலை மேலே இழுத்து வெளியே கொண்டு வந்்தனர்.

பின்னர் தயாராக இருந்த ஸ்டிரெச்சரில் வைத்து மீட்கப்பட்ட நிர்மலா, குமாரி ஆகிய 2 பெண்களையும் ஆம்புலன்சுக்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர். எனினும் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.


Next Story