சேலத்தில் இருவேறு இடங்களில் தனியார் பஸ்கள் மோதி 2 பெண்கள் பலி


சேலத்தில் இருவேறு இடங்களில் தனியார் பஸ்கள் மோதி 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 29 Jun 2023 3:33 AM IST (Updated: 29 Jun 2023 4:39 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருவேறு இடங்களில் தனியார் பஸ் மோதி 2 பெண்கள் பலியானார்கள்.

சேலம்

சாலையை கடக்க முயன்றார்

சேலம் பிரட்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 39). இவர் நேற்று சேலம் 2-வது அக்ரகாரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதே போன்று ஈரோடு மாவட்டம் வடபழனி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி பாஞ்சாலை (55). இவர் நேற்று காலை சேலம் அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் தனது மகளை பார்க்க வந்தார். பின்னர் மகள், பேரப்பிள்ளைகளை பார்த்து விட்டு ஈரோடு செல்வதற்காக பஸ்சில் கலெக்டர் அலுவலகம் அருகே வந்து இறங்கி உள்ளார்.

பின்னர் அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

2 பெண்கள் பலி

இந்த விபத்துகள் குறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் ஒரு சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிவேகமாக வந்த 2 தனியார் பஸ்கள் வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் பலியாகி உள்ளனர். எனவே அதிவேகமாக வரும் பஸ்கள் மீது போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இனி வரும் காலங்களில் விபத்து ஏற்படுவதையும், உயிர் இழப்பு ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும் என்று விபத்துகளை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story