2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பட்டா ரத்து

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). இவர் லோக் ஜனசக்தி கட்சியின் மாநில விவசாய அணி தலைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி செங்கம்மாள் என்ற மனைவியும் கயல்விழி, உமாதேவி, வேம்பு ஆகிய 3 மகள்களும், ராம் விலாஸ் பஸ்வான் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 1994-ம் ஆண்டு பீல்வாடி கிராமத்தில் காலனி அருகில் இலவச வீட்டு மனை பட்டா அரசு சார்பில் கொடுக்கப்பட்டது. பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டாவை அரசு சில காரணங்களால் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் மீண்டும் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உடலில் மண்எண்ணெய் ஊற்றினர்

இந்நிலையில் நேற்று குன்னம் தாசில்தார் நீதிமன்ற ஆணையை நிறைவேற்றுவதாக கூறி சீனிவாசன் இடத்தில் போடப்பட்டுள்ள தகரக் கொட்டகை, கீற்று கொட்டகை, அங்குள்ள வாழை மரங்கள் ஆகியவற்றை வருவாய் துறையினர் அகற்ற முற்பட்டனர். இந்நிலையில் சீனிவாசனின் மகள்கள் கயல்விழி (27), வேம்பு(23) ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்களை மருவத்தூர் போலீசார் தடுத்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து குன்னம் துணை தாசில்தார் சுதாகர், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், பாடலூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

கோரிக்கை

மேலும் எவ்வித முன் அறிவிப்பு இன்றியும், வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் எங்களது வீடுகளை அகற்றுவது முறையற்ற செயலாகும். மேலும் அந்த இடத்தில் தாங்கள் தொடர்ந்து வசிப்பதற்கு முதல்-அமைச்சர் வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story