விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
தரைமட்ட தொட்டி கட்ட சென்ட்ரிங் பிரிக்கும்போது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேரணாம்பட்டு
தரைமட்ட தொட்டி கட்ட சென்ட்ரிங் பிரிக்கும்போது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் அதிபர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் பாபா ஜான் என்கிற அப்துல் வஹாப். தோல் பதனிடும் தொழிலதிபர். இவர் புதியதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த வீட்டில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு 12 அடி ஆழத்தில் 7 அடி நீளம் 7 அடி அகலத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்காக சென்ட்ரிங் போடப்பட்டது.
கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால் தொட்டியினுள் சுமார் 2 அடி அளவுக்கு மழை நீர் தேங்கியிருந்தது.
மூச்சு திணறல்
நேற்று மாலை தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் போடப்பட்டிருந்த சென்ட்ரிங் கட்டுமான பணியை பிரிக்கும் பணியில் பேரணாம்பட்டு அருகே உள்ள பாஸ் மார்பெண்டா மலை கிராமம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முருகேசன் (வயது 44), இவரது அண்ணன் வெங்கடேசன் (50), கொத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (45) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அந்த பணி முடிந்தவுடன் தொட்டிக்குள் சிறிது நேரம் கழித்து இறங்காமல் தொழிலாளி வெங்கடேசன் உடனடியாக இறங்கினார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த முருகேசன் அவரை காப்பாற்ற உள்ளே இறங்கினார். அவரும் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசனின் தம்பியான கட்டிட மேஸ்திரி முருகேசன் இருவரையும் காப்பாற்ற தொட்டியில் இறங்கினார். அப்போது அவரும் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்தார்.
அடுத்தடுத்து 3 பேர் உள்ளே மயங்கி விழுந்ததை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்பு படையினர் விரைவு
இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த இறைச்சி கடை தொழிலாளி ரியாஸ் மற்ற தொழிலாளர்கள் உதவியுடன் தொட்டியினுள் உயிரை பணயம் வைத்து இறங்கி மீட்கும் பணியில் ஈடுபட்டார்.
அதற்குள் தகவலறிந்த பேரணாம்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தொட்டியினுள் மயங்கி உயிருக்காக போராடி கொண்டிருந்த வெங்கடேசன், முருகேசன், கட்டிட மேஸ்திரி முருகேசன் ஆகியோரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்களில் வெங்கடேசன், முருகேசன் ஆகியோர் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர்.
கட்டிட மேஸ்திரியான முருகேசன் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சப்-கலெக்டர்
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் சப்- கலெக்டர் வெங்கட்ராமன், பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை வட்டாட்சியர் வடிவேல், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். புதிதாக கட்டப்பட்டு சென்ட்ரிங் போட்டிருந்த தொட்டியில் நீண்ட நாட்கள் கழித்து மூடியிருந்த தொட்டியில் கட்டுமான பொருட்களை பிரிக்கும் போது அதில் விஷவாயு ஏற்பட்டிருந்ததை அறியாமல் கவனக்குறைவாக தொட்டியினுள் அவசரப்பட்டு இறங்கியதால் 2 பேர் இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பம்
உயிரிழந்த கட்டிட தொழிலாளியான வெங்கடேசனின் முதல் மனைவி சரளா ஏற்கனவே இறந்து விட்டார். அதன்பின் விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் இவர்களுக்கு சரண்யா என்கிற மகளும், சந்தோஷ், பிரசாந்த் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இரண்டாவது மனைவி விஜயலட்சுமி மூலம் சிவசங்கரி (4) என்ற மகள் உள்ளாள்.
இறந்த மற்றொரு தொழிலாளி முருகேசனுக்கு மனைவி சத்தியா மற்றும் கருணாகரன், தனுஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இறந்தவர்கள் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.