விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி


விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள். கழிவுநீர் தொட்டிக்கான ‘சென்ட்ரிங் பலகையை அகற்றியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது

விழுப்புரம்

கண்டமங்கலம்

கழிவுநீர் தொட்டி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கோண்டூர் வானவில் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது45). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் வளாகத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு 10 அடி ஆழத்தில் 10 அடி அகலத்தில் கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டிருந்தது. கழிவுநீர் தொட்டியின்மேல் முழுமையாக பலகை அடிக்கப்பட்டு சென்ட்ரிங் போடப்பட்டிருந்தது. இதனால் காற்றுக்கூட உள்ளே செல்ல முடியாத அளவில் சென்ட்ரிங் இருந்தது.

இந்த நிலையில் கட்டிட மேஸ்திரி, 6 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியின் மீதுள்ள சென்ட்ரிங் பலகையை அகற்ற அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (38), மணிகண்டன் (35) ஆகியோரை வேலைக்கு அமர்த்தி இருந்தார்.

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி

தொழிலாளர்கள் இருவரும் நேற்று கழிவுநீருக்காக கட்டப்பட்ட தொட்டியின் மேல் இருந்த சென்ட்ரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில் மணிகண்டன் ஒரு பலகையை எடுத்ததும் உள்ளே இறங்க முயன்றார். அப்போது அவர் திடீரென தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். என்னவென்று புரியாத நிலையில், அடுத்ததாக அய்யனாரும் உள்ள இறங்க முயன்ற நிலையில் அவரும் மயங்கி தொட்டிக்குள் விழுந்தார்.

கழிவுநீர் தொட்டியில் தண்ணீர் ஏதும் இல்லை என்றாலும், 6 மாத காலமாக அதை கான்கிரீட் போட்டு மூடி வைத்ததால் உள்ளே இருந்த காற்று விஷமாக மாறியதுடன், தொட்டியை திறந்ததும் தொழிலாளர்கள் இருவரையும் விஷவாயு தாக்கி உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அய்யனாரும், மணிகண்டனும் மயக்கம் அடைந்து உயிரிழந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், இறந்த தொழிலாளர்கள் மணிகண்டன், அய்யனார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி மற்றும் வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Related Tags :
Next Story