கழிவுநீர் ெதாட்டியில் அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி


கழிவுநீர் ெதாட்டியில் அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி
x

ஆவடியில் உள்ள படை உடை தொழிற்சாலை பணியாளர் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலியானார்கள்.

ஆவடி,

சென்னை ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை படை உடை தொழிற்சாலை (ஓ.சி.எப்.) பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இதன் வளாகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் ஓ.சி.எப். நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவந்த பணியாளர்களான ஆவடியை அடுத்த பட்டாபிராம் பீமாராவ் நகரை சேர்ந்த மோசஸ் (வயது 42), ஆவடி பஜார் நகரை சேர்ந்த தேவன் (55) மற்றும் ஜார்ஜ், ஆதாம் ஆகிய 4 பேரும் நேற்று கழிவுநீர் கால்வாய் நடுவில் உள்ள சுமார் 4 அடி அகலம், 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்த அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

விஷவாயு தாக்கியது

இதற்காக தேவன், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி கம்பியை வைத்து அடைப்பை குத்தி சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரை விஷவாயு தாக்கியது. இதில் அவர் மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் நின்று கொண்டிருந்த மோசஸ், கழிவுநீர் தொட்டிக்குள் உள்ள சிறிய படி வழியாக உள்ளே இறங்கி, மயங்கி விழுந்த தேவனை தூக்கிக்கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது மோசசையும் விஷவாயு தாக்கியது. இருவரும் மீண்டும் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தனர்.

2 பேர் பலி

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதாம் மற்றும் ஜார்ஜ் இருவரும் ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், கயிறு கட்டி உரிய பாதுகாப்புடன் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, தேவன் மற்றும் மோசஸ் இருவரையும் மீட்டு மேலே தூக்கி வந்தனர். பின்னர் ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷவாயு தாக்கியதில் தேவன், மோசஸ் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் உயிரிழந்த தேவன் மற்றும் மோசஸ் ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ஆவடி ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சம்பத்(55) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story