முன்னாள் நில அளவையருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை
திருப்பூர் செவந்தாம் பாளையத்தைச் சேர்ந்த சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் தண்டபாணி. இவர் மாதப்பூரில் உள்ள நிலத்துக்கு சப்-டிவிஷன் செய்வதற்காக நில அளவீடு செய்ய பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
அந்த நிலத்தை அளவீடு செய்து அறிக்கை அளிக்க பொங்கலூர் பிர்கா நில அளவையர் கருப்பையா பரிந்துரை செய்ய வேண்டும். இதற்காக அவரை தண்டபாணி தொடர்பு கொண்ட போது, நில அளவீடு அறிக்கை பரிந்துரை செய்ய தனக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கொடுக்குமாறு கூறினார். இதனால் அதிர்ச்சியுடன் தண்டபாணி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அவருக்கு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினார்கள். கடந்த 10-1- 2014 அன்று பல்லடம் தாசில்தார் அலுவலகம் அருகே கருப்பையா, ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, கருப்பையாவுக்கு (வயது 63) 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.