ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை


ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 30 Jun 2022 8:22 PM IST (Updated: 30 Jun 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

ஈமுகோழி நிறுவனம் நடத்தி ரூ.1.20 கோடி மோசடி செய்த உரிமையாளர்கள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூர்


ஈமுகோழி நிறுவனம் நடத்தி ரூ.1.20 கோடி மோசடி செய்த உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ரூ.1.20 கோடி மோசடி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை ரோட்டில் ராஜா ஈமு கோழி நிறுவனம் மற்றும் தமிழ் ஈமுகோழி நிறுவனம் ஆகிய பெயரில் 2 ஈமுகோழி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் மாதந்தோறும் கூடுதல் வட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் முதலீடு செய்தனர்.

தொடக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் வட்டி கொடுக்கப்பட்டு வந்தது. பின்னர் வட்டி கொடுக்கப்படவில்லை. இதனால் முதலீடு செய்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த 2 நிறுவனங்களில் முதலீடு செய்த 72 பேரிடம் ரூ.1 கோடியே 20 லட்சத்து 39 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

கோர்ட்டில் வழக்கு

இதையடுத்து போலீசார் ராஜா ஈமுகோழி நிறுவன உரிமையாளரான ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் (வயது 42), தமிழ் ஈமுகோழி நிறுவன உரிமையாளரான சென்னை வடபழனியை சேர்ந்த தமிழ்பிரபு (38) மற்றும் ரவிச்சந்திரன், ரித்திகா, குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்க சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதனால் இந்த வழக்கில் தொடர்புடைய ராஜசேகர், தமிழ்பிரபு உள்பட 5 பேரும் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.

10 ஆண்டு சிறை

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ராஜசேகர், தமிழ்பிரபு ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியதுடன், இந்த அபராத தொகையை முதலீடு செய்த 72 பேருக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ஏ.ரவி உத்தரவிட்டார்.

மீதமுள்ள ரவிச்சந்திரன், ரித்திகா, குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜராகி வாதாடினார்.


Next Story