மின்வாரிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை


மின்வாரிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ரூ.800 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் லோகநாதன், விவசாயி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது நிலத்தில் இருந்த விவசாய மின் மோட்டார் இணைப்பிற்குண்டான மின்கம்பம் பழுதடைந்துள்ளதாகவும், அதனை சரிசெய்து தரும்படி கூறியுள்ளார். அதற்கு கடலூர் பாதிரிக்குப்பம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிந்த திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த தீனதயாளன் (வயது 58), பழுதான மின்கம்பத்தை மாற்ற வேண்டுமானால் லஞ்சமாக ரூ.800 தர வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகநாதன், இதுகுறித்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரைப்படி பாதிரிக்குப்பம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து ரசாயன பொடி தடவிய ரூ.800-ஐ லோகநாதன், தீனதயாளனிடம் கொடுத்த போது அவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பிரபாகரன் தனது தீர்ப்பில், தீனதயாளன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story