தாய், மகள்களை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு உத்தரவு
தாய், மகள்களை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டைன விதித்து கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
நெல்லிக்குப்பம் மோரை எவரட்புரத்தை சேர்ந்தவர் வேலு மனைவி ஆனந்தி (வயது 36). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் மனைவி மச்சகாந்தி (42) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 31.8.2019 அன்று மீண்டும் அவர்களுக்குள் குழந்தைகள் விளையாட்டு தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தியை மச்சகாந்தி, அவரது தம்பிகளான திருவதிகை செட்டிபட்டறை காலனியை சேர்ந்த பாண்டியன் (38), இளங்கோவன் (35) ஆகிய 3 பேரும் ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதை தடுத்த ஆனந்தியின் 2 மகள்களையும் இரும்பு குழாயால் தாக்கி மிரட்டினர். இது பற்றி ஆனந்தி நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மச்சகாந்தி உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி வனஜா தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் இவ்வழக்கில் மச்சகாந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ.1000 அபராதமும், பாண்டியனுக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும், இளங்கோவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜரானார்.