ரூ.500 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை


ரூ.500 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை
x

புகார் கொடுக்க வந்தவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர்

புகார் கொடுக்க வந்தவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

லஞ்சம் கேட்டு தொந்தரவு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் செல்வராஜ் மதுபோதையில் சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதுகுறித்து சண்முகம் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்த்த சாமிதுரை, சண்முகத்திடம் புகாரை பெற்றுக்கொண்டு செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சண்முகத்தை தொடர்பு கொண்டு ரூ.500 லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

2 ஆண்டுகள் சிறை

இதனால் வேதனை அடைந்த சண்முகம், லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த சாமிதுரை மீது தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார், சண்முகத்திடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடந்தது. இதில் சப்- இன்ஸ்பெக்டர் சாமிதுரைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நேற்று நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

1 More update

Next Story