2 இளம்பெண்கள் போலீசில் புகார்
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக 2 இளம்பெண்கள் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர்.
ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி வைத்தீஸ்வரி (வயது 24). இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரின் அறிவுறுத்தலின்படி பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் வைத்தீஸ்வரி அழகன்குளத்தில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சில உடைமைகளை எடுக்க சென்றாராம். அப்போது கணவரின் தந்தை தியாகராஜன், தாய் வளர்மதி, தம்பி வெங்கடேசுவரன் ஆகியோர் சேர்ந்து வீட்டிற்கு வரவிடாமல் தடுத்தார்களாம். தனது உடைமைகளை எடுக்க வந்திருப்பதாக செல்ல முயன்றபோது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு திருமணத்திற்காக வாங்கிய கடன் ரூ.2 லட்சத்தினை வரதட்சணையாக வாங்கிவரும்படி கூறினார்களாம். வரதட்சணையாக வாங்கிவராவிட்டால மகனிடம் சொல்லி வாழவிடாமல் செய்துவிடுவதாக மிரட்டினார்களாம். இதுகுறித்து வைத்தீஸ்வரி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் போஸ் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ (30). இவரின் கணவர் போஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஜெயஸ்ரீயிடம் திருமணத்தின் போது கொடுத்த சீர் சாமான்களை வாங்கி வைத்து கொண்டு வாழவைக்காமல் விரட்டி விட்டார்களாம். இதுகுறித்து ஜெயஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.