ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் அருகே சைனகுண்டா பகுதி ஆந்திர மாநில எல்லையோரம் உள்ளது. இங்கு காவல்துறை மற்றும் வனத்துறையின் சோதனைச்சாவடிகள் உள்ளன.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பூபதிராஜா மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட போலீசார் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தனர். மேலும் மோட்டார்சைக்கிளை சோதனை செய்தபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் குடியாத்தம் அருகே ராஜாகோவில் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் (வயது 22), பூபதி (27) என்பதும், ஆந்திர மாநிலம் காலவபல்லி பகுதியில் இருந்து விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.






