மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனது. இதனை தடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் அறிவுறுத்தலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 23), சூர்யா (19) என்பதும், ஆற்காடு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஆற்காடு டெல்லி கேட் பகுதியில் மறைத்து வைத்திருந்த 12 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story