ஊர் பெயர் பலகைகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
ஊர் பெயர் பலகைகளை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தோகைமலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகைகள் அடுத்தடுத்து திருட்டு போய் வந்தது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடசேரி பிரிவு சாலையில் பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் உள்ள ஊர் பெயர் பலகை அருகே 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த அப்துல்லா (வயது 26), பகுதியை சேர்ந்த பீர்முகமது (19) என்பதும், அவர்கள் தோகைமலை பகுதியில் ஊர் பெயர் பலகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.