டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியில் டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது ரூ.15 லட்சம் வாகனங்கள் பறிமுதல்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில், தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) புவனேஸ்வரி தலைமையில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு, தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று தியாகதுருகம் அருகே வடதொரசலூர் பிரிவு சாலை பகுதியில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் நீலேஷ்காமத் என்கிற தினேஷ்(24) டிராக்டர் மெக்கானிக் மற்றும் சித்தமலை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் பாரத் (24) என்பதும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதும், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், வரஞ்சரம், திருப்பாலபந்தல், சங்கராபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தினேஷ், பரத் இருவரையும் கைதுசெய்த போாலீசார் அவர்களிடமிருந்து 4 டிராக்டர், 1 டிப்பர் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் தினேஷ் மற்றும் பாரத் ஆகியோர் மீது சங்கராபுரம், வடபொன்பரப்பி, கள்ளக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.