சிறுமிகளை திருமணம் செய்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
கரூர் பகுதியில் சிறுமிகளை திருமணம் செய்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் போக்சோவில் கைது
அரவக்குறிச்சி அருகே உள்ள வரிக்காபட்டியை சேர்ந்தவர் மயில்ராஜ் (வயது 23). இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அரவக்குறிச்சி சமூக நல அலுவலர் பூரணம், க.பரமத்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரூபி, சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக் கரசி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, மயில்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை
கடவூர் அருகே உள்ள குளக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஜூன் 26-ந்தேதி 14 வயதான சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக சைல்டுலைன் மூலம் கிடைத்த தகவலின் பேரில் கடவூர் ஊராட்சி ஊர் நல அலுவலர் மாரியம்மாள் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைதுசெய்து, கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.