வைகை ஆற்றில் குளித்த 2 வாலிபர்கள் மூழ்கினர்


மதுரை அருகே குளிக்க சென்ற போது வைகை ஆற்றில் 2 வாலிபர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை

வாடிப்பட்டி,

மதுரை அருகே குளிக்க சென்ற போது வைகை ஆற்றில் 2 வாலிபர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாமி கும்பிட வந்தனர்

மதுரை தெற்குவாசல் தில்லை நகர்சந்தையை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் தனசேகரன் (வயது 23). எம்.எஸ்.சி. பட்டதாரி. திருமங்கலத்தை சேர்ந்த ஞானமணி மகன் கண்ணன் (20). இவர்கள் இருவரும் உறவினர்கள்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து பரவையில் வைகை ஆற்று புதுபாலம் எதிரில் துவரிமான் பிரிவில் உள்ள சாலைக்கரை முத்தையா சுவாமி கோவிலில் நேற்று மதியம் 1.30 மணியளவில் சாமி கும்பிட வந்தனர்.

2 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்

அப்போது இருவரும் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு புது பாலத்திற்கு அடியில் வைகை ஆற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றனர். அங்கு திடீரென்று எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். உடனே அய்யோ.. அம்மா.. என்று அவர்கள் அலறினார்கள்.

அவர்கள் அலறிய சத்தத்தை கேட்டு அங்கிருந்த உறவினர்கள் ஓடி வந்தனர். அதற்குள் இவர்கள் இருவரும் ஆற்று தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மாயமானார்கள்.

தேடும் பணி தீவிரம்

உடனே உறவினர்கள் சிலர் ஆற்றுக்குள் இறங்கி மாயமான 2 பேரையும் தேடினார்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இது குறித்து தீயணைப்பு துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் மாயமான 2 பேரை தேடினார்கள். மாலை வரை தேடியும் ஆற்றில் மாயமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆற்றில் மூழ்கியவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. மாலையில் இருட்ட தொடங்கியும் தீயணைப்புத்துறையினர் தேடும் பணியை நிறுத்தினர். இன்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடும் பணியை தொடங்குகிறார்கள்.

உறவினர்களுடன் சாமி கும்பிட வந்த இடத்தில் குளிக்க சென்ற 2 வாலிபர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story