வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
விருத்தாசலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது நகைகள் மீட்பு-மோட்டார் சைக்கிள் பறிமுதல்
விருத்தாசலம்
விருத்தாசலம் அருகே உள்ள பில்லூர் சோதனைச்சாவடியில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை ரம்ஜான் தைக்கால் பகுதியை சேர்ந்த அப்துல்அலீம் மகன் முகமது பாரித் (வயது 22), முகமது ரபிக் மகன் முகமது ஷாஜகான் (20) ஆகியோர் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனுடன் மோட்டார் சைக்கிளில் வேடப்பர் கோவில் அருகே சென்ற விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த அமுதா(46) என்பவரை மறித்து 5 பவுன் நகையைும், விருத்தாசலம் காந்திநகரை சேர்ந்த நித்யா என்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் விருத்தாசலம், கும்பகோணம் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 8 பவுன் நகையை மீட்டனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்த போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் பாராட்டினார்.