தொழிலாளியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
தா.பழூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கத்திக்குத்து
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன் கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பார்த்திபன் (வயது 34), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர்கள் 2 பேரின் குடும்பத்துக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு பார்த்திபனை செல்வராஜ் மகன் சவுந்தரராஜன் (25) தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும், அவரது தம்பி செல்வகுமார் (19) தான் வைத்திருந்த கத்தியால் பார்த்திபனை குத்தியுள்ளார்.
சிறையில் அடைப்பு
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தகராறை விலக்கி விட்டு காயமடைந்த பார்த்திபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கத்தியால் குத்தியதாக செல்வகுமார் மற்றும் சவுந்தரராஜனை கைது செய்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.