கார் மோதி வாலிபர்கள் 2 பேர் பலி
கணியூர் மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள்.
கருமத்தம்பட்டி
கணியூர் மேம்பாலத்தில் கார் மோதி வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த மோப்பிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் என்பவரின் மகன் சோமசுந்தரம் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் விக்னேஷ் (23). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இரவு சோமசுந்தரமும், விக்னேசும், மோட்டார் சைக்கிளில் அவினாசி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கணியூர் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் கவுதம் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சோமசுந்தரம், விக்னேஷ் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
2 பேர் பலி
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சோமசுந்தரத்தை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் உயிரிழந்த 2 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கவுதமை கைது செய்தனர். கணியூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.