மொபட்டில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியில் நேற்றுமுன்தினம் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதனை பார்த்துவிட்டு 2 வாலிபர்கள் மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள சாலையில் திடீரென ஆபத்தான முறையில் மொபட்டில் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சாலையில் வாகனம் வந்தபோது சிறிய இடைவெளியில் இருவரும் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாலிபர்கள் சாகசம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் வெளியானது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் அறிவுறுத்தலின்படி ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் பிரபாகரன், நிதிஷ்குமார் ஆகிய போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு ெசய்தனர். இதையடுத்து பொம்மிகுப்பத்தை சேர்ந்த 17 வயது வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். இருவரும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தது தெரிய வந்தது.
மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டியதற்கு இரண்டு பேருக்கும் தலா ரூ.1000, வாகனத்தின் பதிவு எண் தவறுதலாக இருந்ததற்கு ரூ.500, அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்கு ரூ.1000, 18 வயது பூர்த்தி அடையாமல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.8,500 அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.