சொகுசு காரில் கடத்தப்பட்ட 20 மூட்டை குட்கா சிக்கியது
கருப்பூர்:-
கருப்பூர் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 20 மூட்டை குட்கா சிக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் வாகன தணிக்கை
சேலம் கருப்பூர் அருகே சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டைக்கு சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் 20 மூட்டைகள் இருந்தது. அதனை போலீசார் சோதனையிட்ட போது குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் பாடுநீர் பகுதியை சேர்ந்த டிரைவர் கல்யாண்சிங் (வயது 24) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் செவ்வாய்பேட்டை கடை உரிமையாளர் தேவா என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தேவா தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக தெரிகிறது.
தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் கல்யாண்சிங், அவருக்கு மாற்று டிரைவராக இருந்த செவ்வாய்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.