ஒருங்கிணைந்த பஸ் முனையத்தில் ரூ.20 கோடியில் கிராவல் மண் நிரப்பும் பணி


ஒருங்கிணைந்த பஸ் முனையத்தில் ரூ.20 கோடியில் கிராவல் மண் நிரப்பும் பணி
x

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமையவுள்ள இடத்தில் கிராவல் மண் நிரப்பும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமையவுள்ள இடத்தில் கிராவல் மண் நிரப்பும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த பஸ் முனையம்

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமைப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்முனையம், கனரக சரக்கு வாகன முனையம், சாலைகள், மழைநீர்வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் கட்டும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமையவுள்ள இடத்தில் ரூ.20 கோடியே 10 லட்சத்தில் கிராவல் மண் நிரப்புவதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கிராவல் மண் நிரப்பும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

404 பஸ்கள் நிறுத்த வசதி

பஞ்சப்பூரில் முதல்கட்டமாக ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகளை செய்ய ரூ.350 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி தந்துள்ளார். பஸ் நிலையத்துக்கு 200 பஸ்கள் வந்து செல்லும் வகையிலும், 104 பஸ்கள் அரைமணிநேரம் நிற்கும் வகையிலும், 100 பஸ்கள் நிரந்தரமாக நிற்கும் வகையிலும் என மொத்தம் ஒரேநேரத்தில் மொத்தம் 404 பஸ்களை நிறுத்த வசதி உள்ளது. ஒரு நேரத்தில் 10 ஆயிரம் பேர் வந்து செல்ல முடியும்.

கனரக சரக்கு வாகன முனையத்துக்கு அனைத்து சரக்கு வாகனங்களும் வந்து செல்வது போல் வசதிகள் செய்யப்படும். 28 ஏக்கரில் மொத்தம் மற்றும் சில்லறை மார்க்கெட் கொண்டு வரப்பட உள்ளது. சாலைகளை அகலப்படுத்தி கனரக வாகன முனையத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக மேம்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையிலும் பெரிய வணிக வளாகம், வர்த்தக மையம் வருகிறது.

நாய்கள் கருத்தடை மையம்

மாநகரில் பாதாளசாக்கடை பணிகள் முடிப்பதில் தாமதம் உள்ளது. இந்த பணிகளை விரைந்து செய்ய கூறி உள்ளோம். மாநகரில் அனைத்து இடங்களிலும் பாதாளசாக்கடை பணி முடிந்துவிட்டதால் சாலைகள் சீரமைக்கப்பட்டு விடும். தூய்மைப்பணியாளர்கள் நியமித்து குப்பைகளை அப்புறப்படுத்தும்போது, அரசுக்கு பொருட்செலவு அதிகமாகும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களே குப்பைகளை தரம்பிரித்து தரும்வகையில் மிகப்பெரிய திட்டத்தை சென்னையில் தொடங்க இருக்கிறோம்.

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்து முதல்கட்ட பணிக்கு நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது. இனிமேலும் பஸ் நிலையம் அங்கு வராது என்று கூறிகொண்டு இருப்பவர்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும். புதிதாக 4 இடங்களில் நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு மக்களின் நன்மையை கருதி அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக மக்களிடம் பயன்பாட்டில் உள்ளதை உடனடியாக நிறுத்துவது என்பது கடினம்.

மழைக்காலத்தில்

ஆனாலும் பிளாஸ்டிக் ஒழிக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு டெண்டர் முடிவுக்கு வந்ததில் இருந்து அடுத்த 18 மாதங்களில் பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அரியமங்கலம் குப்பை கிடங்கை முழுவதுமாக அப்புறப்படுத்த இன்னும் 1½ ஆண்டுகள் ஆகும். அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் பெருங்குளத்தூரில் உள்ள குப்பைக்கிடங்கை அப்புறப்படுத்தி அங்கு பூங்கா அமைக்கப்படுகிறது. ஒரு லட்சத்துக்கு மேல் மக்கள் உள்ள மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும். மழைக்காலத்துக்காக சென்னைக்கு மட்டும் ரூ.912 கோடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். ஆகையால் மழைக்காலத்துக்கு எந்தபாதிப்பும் ஏற்படாதவகையில் அனைத்தும் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story