மாவட்ட தலைநகரங்களில் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம்


மாவட்ட தலைநகரங்களில் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மாவட்ட தலைநகரங்களில் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

திருவாரூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மாவட்ட தலைநகரங்களில் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

பயிற்சி பட்டறை

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் பாலின உணர்திறன் என்ற தலைப்பில் மகளிர் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். பயிற்சியினை சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் தொடங்கி வைத்தார்.

இதில் மாநில தலைவர் லெட்சுமிநாராயணன், மாநில பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் ஈவேரா, மாநில துணை செயலாளர் ஜூலியஸ், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் பொதுச்செயலாளா் ரெங்கராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டம்

எனவே தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை நிலுவையின்றி அறிவித்த தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story