திறப்பு விழா நடத்திய 20 நாளில் மூடு விழா கண்ட தக்காளி விற்பனை நிலையம்


திறப்பு விழா நடத்திய 20 நாளில் மூடு விழா கண்ட தக்காளி விற்பனை நிலையம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் திறப்பு விழா நடத்திய 20 நாளில் தக்காளி விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனை திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

இந்திய சமையலறைகளில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து உள்ளது.

எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக அரசு சார்பில் பல மாநிலங்களில் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ ரூ.180

தமிழகத்தில் கடந்த 1½ மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கள்ளக்குறிச்சியில் ஒரு கிலோ தக்காளி சிறிய ரகம் குறைந்தபட்சம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்பனையானது.

இதனால் ஏழை-எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்க கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

விற்பனை நிலையம் திறப்பு

அதன்படி கள்ளக்குறிச்சி உழவர் சந்தை வளாகத்தில் தக்காளி குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கிட தோட்டக் கலைத்துறை சார்பில் கடந்த மாதம் 10-ந் தேதி விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. இந்த விற்பனை நிலையத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரை(1 மணி நேரம்) மட்டுமே ஒரு நபருக்கு ஒரு கிலோ வீதம் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் சில நாட்கள் தட்டுப்பாடு காரணமாக தக்காளி விற்பனை செய்யவில்லை.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி முதல் விற்பனை நிலையம் மூடியே கிடக்கிறது. அன்று முதல் தக்காளி விற்பனை செய்யவில்லை. இதனால் ஏழை-எளிய மக்கள் கூடுதல் விலைக்கு தக்காளியை வாங்கிச் செல்கிறார்கள்.

20 நாளில் மூடு விழா

தக்காளி விற்பனை நிலையம் திறப்பு விழா நடத்திய 20 நாளில் மூடு விழா கண்டது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் இதோ...

கள்ளக்குறிச்சி பார்வதி:- கூலி வேலைக்கு சென்று தான் குடும்பத்தை நடத்துகிறோம். ஒரு நாளைக்கு கூலி ரூ.200 தான் கிடைக்கிறது. இதிலும் சில நாட்கள் வேலை கிடைப்பதில்லை. கடந்த 1½ மாதமாக தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் அதற்கான செலவும் உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்து வந்தனர். ஒரு மணி நேரமே விற்பனை செய்யப்பட்டாலும் கூட என்னைப்போன்ற ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் கடந்த 4 நாட்களுக்கு மேலாக தக்காளி விற்பனை செய்யாமல் மூடி கிடக்கிறது. இதனை மீண்டும் திறந்து தக்காளி விற்பனை செய்ய வேண்டும்.

ரேஷன் கடையில்...

கள்ளக்குறிச்சி சந்திரசேகர்:- தோட்டக் கலைத்துறை சார்பில் தொடங்கப்பட்ட விற்பனை நிலையத்தில் கிலோ ரூ.80-க்கு தொடர்ந்து தக்காளி வழங்க வேண்டும். அதேபோல் தற்போது ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கு தக்காளி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி வழங்க வேண்டும்.


Next Story