வெறிநாய்கள் கடித்து குதறியதில்20 ஆடுகள், கன்றுக்குட்டி செத்தது


வெறிநாய்கள் கடித்து குதறியதில்20 ஆடுகள், கன்றுக்குட்டி செத்தது
x
திருப்பூர்


உடுமலை அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 20 ஆடுகள், ஒரு கன்றுக்குட்டி செத்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

வெறிநாய்கள்

உடுமலை பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். ஒரு சில விவசாயிகள் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். இதற்காக தோட்டத்தில் பட்டி அமைத்து அங்கு ஆடு மற்றும் மாடுகளை அடைத்து பராமரிக்கப்படுகிறது. இந்த பட்டிக்குள் அடிக்கடி வெறிநாய்கள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்றுவிடுகிறது.

உடுமலையை அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் தோட்டத்தில் பட்டி அமைத்து 21 ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த பட்டியானது மேற்கூரை வேய்ந்து, சுற்றிலும் தகரத்தால் வேலி ேபால் அடைக்கப்பட்டிருந்தது. ஆடுகள் சென்றுவர வாசல் போன்று கேட் ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த கேட் இரும்பால் ஆனது.

20 ஆடுகள் செத்தன

வழக்கம்போல் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று மாலையில் பட்டியில் அடைத்து வைத்தார். பின்னர் நேற்று காலை பட்டிக்கு அவர் சென்றபோது பட்டியில் இருந்து சற்றுதொலைவில் அங்குெகான்றும் இங்கொன்றுமாக குடல் சரிந்த நிலையில் 10 ஆடுகள் செத்துக்கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பட்டிக்கு வேகமாக சென்றார். அங்கு பட்டிக்குள் 10 ஆடுகள் செத்துக்கிடந்தன. ஒரு ஆடு மட்டும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

பட்டிக்குள் 15-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டமாக வந்து பட்டியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகர ஷீட் இடைவெளியில் கட்டப்பட்டுள்ள கம்பியை பற்களால் கடித்து தகரத்தை இழுத்து நகர்த்தி அதன் வழியே உள்ளே சென்று ஆடுகளை கடித்து குதறி உள்ளது. சில ஆடுகளை இழுத்துக்கொண்டு வெளியே போட்டுள்ளது. தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான கன்றுகுட்டியையும் வேட்டை நாய்கள் கடித்து குதறியதில் பலியாகி உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குழு அமைத்து கூட்டம் கூட்டமாக வருகின்ற வெறி நாய்கள் தோட்டத்து சாளையில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகின்றது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. வெறி நாய்களின் அட்டகாசத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் ரோந்து பணியில் ஈடுபட முயற்சித்தால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடிக்கும் முன்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதில்லை. கால்நடைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story