விவசாயத்துக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்


விவசாயத்துக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்
x

விவசாயத்துக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

விவசாயத்துக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமாரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன்:- குறுவை பாசனத்துக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

முறைப்பாசன கால அளவை மாற்ற வேண்டும்

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார்:- தற்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. இந்த நிலையில் வாரம் ஒருமுறை முறைப்பாசனம் வைத்து தண்ணீர் திறந்து விடுவதால் சாகுபடிசெய்த பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாரம் ஒருமுறை முறைப்பாசனம் என்பதை மாற்றியமைக்க வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். குறுவை தொகுப்பு திட்டம் 2 ஏக்கர் என அறிவித்து விட்டு தற்போது ஒரு ஏக்கருக்குத்தான் வழங்குகிறார்கள். அதே போல் இதற்கான காலக்கெடு ஜூலை 31-ந்தேதி வரை என்பதை ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன்:- ேவளாண்மைக்கான இலவச மின்சாரத்தை அபகரிக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளுக்கான மின்சாரத்துக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கொண்டு வருகிறது. இதனை கைவிட வேண்டும்.

தென்னை வணிக வளாகம்

நசுவினி ஆற்றுபடுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் வீரசேனன்:- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் தென்னை வணிக வளாகத்தை செயல்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இங்குள்ள எந்திரங்கள் இருந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து உள்ளே நிறுவப்பட்டுள்ள எந்திரங்கள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை வணிக வளாக நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர்:- காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் பங்கீடு இதுவரை கிடைக்காததால் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முதல்-அமைச்சர் காவிரி நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை நீடிக்குமேயனால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து பேரிடர் நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

உர விலையை குறைக்க வேண்டும்

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன்:- டெல்டா மாவட்டங்களில் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். மத்திய அரசு யூரியா விலையை குறைத்தால் போதாது. டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக நசுவினி ஆற்றுபடுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் வீரசேனன், சாலையோரம் பனை மர விதைகளை நடவு செய்யக்கோரி கலெக்டரிடம் பனை விதைகளை வழங்கினார்.


Next Story