டிராக்டர் மீது வேன் மோதல் 20 பேர் காயம்
விழுப்புரம் அருகே டிராக்டர் மீது வேன் மோதல் 20 பேர் காயம்
விழுப்புரம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு நேற்று காலை பக்தர்களை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்றுலா வேன் புறப்பட்டது. வேனை நெய்வேலியை சேர்ந்த ரமேஷ்(வயது 40) என்பவர் ஓட்டினார். விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் கூட்டுசாலை அருகே வந்த போது அந்த கூட்டுசாலையில் இருந்து பிள்ளையார்குப்பம் செல்வதற்காக விறகுகளை ஏற்றிச்சென்ற டிராக்டரின் பின்னால் வேன் மோதியது. மோதிய வேகத்தில் டிராக்டர் நடுரோட்டிலேயே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் ரமேஷ் மற்றும் வேனில் பயணம் செய்த நெய்வேலியை சேர்ந்த சின்னத்துரை மனைவி சின்னப்பொண்ணு(வயது 60), லோகநாயகி(70), கோபாலகிருஷ்ணன் மகள் ஜெயசுந்தரி(20), ராஜகோபால் மனைவி விஜயா(40), சிவக்குமார் மனைவி ஜெயந்தி(38), உமேஷ் மகன் நரேஷ்(7) உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த வளவனூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.