சாகுபடி செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல்


சாகுபடி செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல்
x

கல்வராயன்மலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இதனை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வனப்பகுதியில் சட்டத்தை மீறி கஞ்சா சாகுபடி செய்து பின்னர் அதனை விற்பனை செய்து வருகின்றனர். இதை தவிர்க்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கல்வராயன்மலையில் உள்ள வெங்களூர் கிராம வனப்பகுதியில் தண்ணீர் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் கஞ்சா சாகுபடி செய்து பராமரிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், போலீஸ்காரர் டோமினிக் மற்றும் போலீசார் வெங்களூரில் இருந்து 5 கி.மீட்டர் தொவைவில் உள்ள தண்ணீர் பள்ளத்தாக்கு என்ற இடத்துக்கு ஒத்தையடி பாதை வழியாக சுமார் 3 மணி நேரம் நடந்தே சென்றனர்.

கைது

அப்போது அங்கு விவசாயம் செய்வது போல், நாற்றாங்கல் அமைத்து சுமார் 30 சென்ட் நிலத்தில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வெங்களூர் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகன் அண்ணாமலை (வயது 32) என்பவர் கஞ்சா சாகுபடி செய்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story