திண்டுக்கல் அருகே பிரிட்ஜில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் அருகே பிரிட்ஜில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெட்டியார்சத்திரம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் உள்ளிட்ட அதிகாரிகள் நவாமரத்துப்பட்டியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு மளிகை கடையில் புகையிலை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரரின் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து குளிர்சாதன பெட்டியில் இருந்த 20 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்ற மற்றொரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.